அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமை ஆற்றும் ஆசிரியர்கள்
வாழ்க்கையில் முன்னேறிச்சென்று சிகரத்தை அடைவதற்கு அடிவார முகாமாக இருப்பது பிளஸ்-2 தேர்வுகள்தான். இதைத்தான் எதிர்காலத்தின் வாசல் என்பார்கள். இதை திறந்து முன்னேற்ற பாதையில் செல்லவேண்டும் என்பதற்காக, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களை கசக்கிப்பிழிந்து, பல பள்ளிக்கூடங்களில் மார்க் எடுக்கும் எந்திரங்களாக மாற்றிவிடுகிறார்கள். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை அவர்களை மனப்பாடம் செய்யவைத்து, சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்று கிராமங்களில் சொல்வார்களே, அதுபோல புரிந்து படித்தார்களா?, புரியாமல் படித்தார்களா? என்று தெரியாமல், அப்படியே போய் எழுதவைத்து, நிறைய மார்க்குகள் எடுத்தால் போதும் என்ற நிலையை உருவாக்கிவிடுகிறார்கள்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முந்தைய ஆண்டு களை காட்டிலும் சிறந்த பலன்களை அளித்திருப்பது, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தரும். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக கல்வித் துறை ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 35 அரசுப் பள்ளிகளில்தான் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டில் அத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளது.100 சதவீத மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து 1,117 பள்ளிக்கூடங்கள் சாதனை புரிந்துள்ளன. இதில், 100 பள்ளிக்கூடங்கள் அரசுப்பள்ளிக்கூடங்கள் மாணவர்களை விட அதிக மாணவிகள் தேர்ச்சி பெறுவதும், முதல் இடங்களை கைப்பற்றுவதில் முன்னணியில் இருப்பதும் இந்த சாதனையை மாணவர்கள் தட்டிப் பறிக்கும் காலம் வந்தால் அதுதான் புதிய செய்தியாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு சதவீதமாவது தேர்ச்சி விகிதம் உயர்ந்து வருவது ஆரோக்கியமான அம்சம்.தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புத் திட்டத்தின் கீழ் செங்கல் சூளை, பட்டாசு கம்பெனி போன்றவற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர் சிறுமிகள் பிளஸ் 2 தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் சேர காத்திருக்கிறார்கள் என்ற தகவல் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்வாறு மீட்கப்பட்ட எழுபதாயிரம் குழந்தைகளுக்காக 341 சிறப்பு மையங்கள் செயல்படுகின்றன. சிறப்பாக செயல்படுகின்றன என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.
இந்த மாணவர்களை எல்லாம் வெறும் புத்தக புழுக்களாக மட்டுமே உருவாக்கி ,இந்த தேர்வு தொடர்பான வினாக்களுக்கு பதிலளிக்க மட்டும் பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொடுத்திருக்கிறோம். எவ்வளவு அதிகமான மதிப்பெண்ணை பெற்ற மாணவர்களுக்குக்கூட வாழ்க்கைப்பாடம் முழுமையாக தெரியாத நிலையில், நமது கல்வி அமைந்துவிட்டது. உல்லாசப்பயணம் என்பதே பள்ளிக்கூடங்களில் இல்லாமல் போய்விட்டது. தாவரங்களை பார்த்திராத மாணவர்கள் தாவரவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்களை பெற்றுவிடுவதில் என்ன லாபம்?. இலக்கியங்களை முழுமையாக அறியாதவர்கள் இலக்கிய பாடத்தில் அதிக மதிப்பெண்களை பெற்றுவிடுவதில் என்ன பயன்?.






